ஞாயிறு, செப்டம்பர் 11, 2011



قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِندِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِ مِنَ القُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَن ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ

28: 78. ''என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். ''இவனை விட அதிக வரிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். 


அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறந்த அந்த மூவரும்


அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில் ஒரு வெண்தோல் உடையவர், ஒரு வழுக்கைத்தலையுடையவர், ஒரு குருடர் ஆகிய மூவர் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடி அவர்களிடம் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் (முதலில்) வெண்தோல் நோயுடையவரிடம் வந்து , உமக்கு மிக உவப்பானது எது என வினவினார் ? அதற்கவர் அழகிய நிறம், அழகிய தோல் (மக்கள் அறுவெறுக்கும் வெண் தோல்) என்னை விட்டுப் போய் விட வேண்டும் எனக் கோறினார்.

அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே அவரது அறுவெறுப்பான நிறம் போய் விட்டது அழகிய நிறம் கொடுக்கப்பட்டார். பின்னர் உமக்கு எச்செல்வம் உவப்பானது ? என அம்மலக்கு அவரிடம் வினவினார். அவர் ஒட்டகை வேண்டும் எனக்கூறவே , அவருக்கு ஒரு சினை ஒட்டகை வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி அருள்வானாக ! என ( அவருக்கு ) அம்மலக்கு ( வாழத்துக் ) கூறினார்.

பின்னர் அவ்வழுக்கைத் தலையுடையவரிடம் அம்மலக்கு வந்து உமக்கு மிக உவப்பானது எது என்று வினவினார்?

அதற்கவர் மக்கள் என்னை வெறுக்கும் இவ்வழுக்கை என்னை விட்டுப் போய்விட வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே, அவரது வழுக்கை அவரை விட்டுப் போய் விட்டது. அழகிய தலைமுடி அவருக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர் அம்மலக்கு அவரிடம் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது ? என வினவினார். அவர் பசுமாடு எனக்கூறவே அவருக்கு ஒரு சினைப் பசுமாடு வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு பரகத்(அபிவிருத்தி)வழங்குவானாக! என அவருக்கு அம்மலக்கு வாழத்துக் கூறினார்.

பின்னர் குருடரிடம் அம்மலக்கு உமக்கு மிக உவப்பானது எது ? என வினவினார் அல்லாஹ் எனக்கு கண்ணொளி வழங்கி அதன் மூலம் நான் மக்களைப் பார்க்க வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே அல்லாஹ் அவருக்கு கண்ணொளி வழங்கினான். பின்னர் அம்மலக்கு அவரிடம் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது? என வினவினார். அதற்கவர் ஆடு எனக்கூறவே அவருக்கு ஒரு சினை ஆடு வழங்கப் பட்டது. அல்லாஹ் உமக்கு பரகத் (அபிவிருத்தி ) அருள்வானாக ! என அம்மலக்கு வாழ்த்துக் கூறினார்

மூவருக்கும் அருளிய அவர்களுடைய கால் நடைகள் குட்டி போட்டன. முதலாமவருக்கு ஒட்டக மந்தையும், இரண்டாமவருக்கு மாட்டுப்பண்ணையும், மூன்றாமவருக்கு ஆட்டுமந்தையும் உருவானது.

பிரிதொரு காலத்தில் ஒரு நாள் . . .
பின்னர் அம்மலக்கு வெண்தோல் நோயுடையவராக இருந்தவரிடம் வெண்தோல் நோயுடையவர் தோற்றத்தில் வந்து, நான் ஓர் ஏழை மனிதன் எனது பிரயாணத்தில் எனது பொருட்கள் தீர்ந்து விட்டன. இப்பொழுது எனக்கு இங்கே அல்லாஹ்வையும் உம்மையுமல்லாது எனக்கு வேரு வழியில்லை. ஆகவே உமக்கு அழகிய நிறத்தையும், அழகியதோலையும், பொருட்செல்வங்களையும் வழங்கிய அல்லாஹ்வைக் கொண்டு, உம்மிடம் ஓர் ஒட்டகையை கேட்கிறேன். அதனைக் கொண்டு எமது பயணத்தில் போதுமாக்கி கொள்கிறேன் என்றார்.

அதற்கவர் எனக்கு ஏராளமான கடமைகள் உள்ளது.(அவைகளை நிறைவேற்ற வேண்டி உள்ளதால் உமக்கு ஒட்டகை தரமுடியாது என்றார். அதற்கு அம்மலக்கு நான் உம்மை அறிவேன் நீர் (ஒரு காலத்தில்) மக்கள் வெறுக்கும் வெண்தோல் நோயுடையவராகவும், ஏழையாகவும் இருக்க வில்லையா ? அல்லாஹ் உமக்கு இவைகளை வழங்கினான்.

அதற்கவர் இச்செல்வங்களை என் மூதாதையரிடமிருந்து பரம்பரை வாரிசு சொத்தாகப் பெற்றேன் எனக்கூறினார்.

அதற்கு அம்மலக்கு இக்கூற்றில் நீ பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் நீர் எவ்வாறு இருந்தீரோ அவ்வாறே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக ! எனக் கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு வழுக்கைத் தலையுடையவரிடம் , வழுக்கைத் தலை தோற்றத்தில் வந்து அவரிடம் ( முன்னவரிடம் ) கேட்டது போல கேட்டார்.

அவரும் அவர் பதிலளித்தது போன்றே பதிலளிக்கவே , நீர் உமது கூற்றில் பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் நீர் எவ்வாறு இருந்தீரோ அது போன்றே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக ! என அம்மலக்கு கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு குருடரிடம் , குருடர் தோற்றத்தில் வந்து, நான் ஏழை வழிப் போக்கன் பிரயாணத்தில் என் பொருட்கள் தீர்ந்து விட்டன. இன்று எனக்கு அல்லாஹ்வைக்கொண்டும் பின்னர் உம்மைக் கொண்டுமே தவிர வேரு வழியில்லை. அல்லாஹ்வைக்கொண்டு உம்மிடம் ஓர் ஆட்டைக் கேட்கின்றேன். அதைக்கொண்டு எமது பயணத்தை போதுமாக்கி கொள்வேன் என்று கூறவே.

அதற்கவர் நான் குருடனாக இருந்தேன் அல்லாஹ் எனக்கு பார்வையை மீட்டித்தந்தான். (எனது செல்வத்தில்) நீர் விரும்புபவைகளை எடுத்துக் கொண்டு மீதியை விட்டுச்செல்லும் ! நீ எடுத்துக் கொள்ளும் பொருளை அல்லாஹ்வுக்காக இன்று உமக்கு அளிக்கத் தயங்க மாட்டேன். எனக்கூறினார்.

அதற்கு அம்மலக்கு உம் செல்வங்களை உம்மிடமே வைத்துக் கொள்வீராக ! நீங்கள் மூவரும் சோதிக்கப்பட்டீர்கள் ( அதில் ) அல்லாஹ் உம்மை பொருந்தி கொண்டான் உம் மற்ற இரு தோழர்கள் மீதும் அல்லாஹ் கோபமடைந்து விட்;டான் எனக்கூறினார் - நூல் : புகாரி , முஸ்லிம்


மேற்கானும் நபிமொழி நமக்கு உணர்த்துவதென்ன ? மேற்கானும் நபிமொழி நமக்கு உணர்த்துவது யாதெனில். நாம் தமக்குத் தேவையானவைகளை மிக பவ்வியமாக அல்லாஹ்விடம் கேட்டுப்பெறுகிறோம். அல்லாஹ்வும் நமது தேவைகளை அறிந்து அதற்கொப்ப அல்லது அதைவிட அதிகமாகத் தந்து மகிழ்கிறான். தேவைக்கதிகமாகக் கிடைத்து விட்டால் அவைகளை தாம் கடினமான முயற்சிகளை மேற்கொண்டு சம்பாதித்தவைகள் என மனிதன் இருமாப்புக்கொள்ள ஆரம்பித்து விடுகிறான். தான் சம்பாதித்தவைகள் என்கிற சிந்தனைகள் உருவாகும்போது அச்செல்வங்களை தனது கையில் இருகப்பிடித்து வைத்துக்கொள்கிறான். தன்னைப்போன்ற பிற சகோதரனுடைய தேவையைப் பூர்த்தி செய்யத்தயங்கி விடுகிறான். தாம் ஒருகாலத்தில் தனது தேவைக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுது மன்றாடியதை மறந்து விடுகிறான் அல்லாஹ்விடம் நன்றி கெட்டவனாகி விடுகிறான், தான் என்ற மமதைக்கு நிரந்தர சொந்தக்காரனாகி விடுகிறான். தான் என்கிற மமதை உருவானால் ?

அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; ''நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்'' என்று கூறினார்கள். 28:76

(அதற்கு அவன்) கூறினான்; ''எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!'' . . . 28:78


காருன் தனக்குக் கிடைத்த செல்வங்களை தன்னுடைய அறிவுத்திறமையால் அடைந்து கொண்டதாக தன்னுடைய கூட்டத்தாரிடம் கூறினான். அதனால் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான் கலை நுனுக்கத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு தகுந்தாற் போல் எழுப்பிய தனது பங்களாவுக்குள் நுழைய முடியாமல் அதன் நுழைவு வாயிலில் வைத்து அவனையும், அவனது சொகுசு பங்களாவையும் பூமிக்குள் புதையச் செய்து விடுகின்றான்.  

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச்செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. 28:81


நம்மிடம் குவியும் செல்வங்கள் நாம் நம்முடைய அறிவுத் திறமையைக்கொண்டு உருவாக்கியவைகள் எனும் என்னம் எக்காரணம் கொண்டும் நம் மனதில் கடுகளவும் உதிக்கக் கூடாது என்பதற்காக மேற்கானும் காரூனுடைய சம்பவத்தை அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.( நாம் கஸ்ட்டப்பட்டே செல்வங்களை உருவாக்கினாலும் தன்னுடைய உடல் உழைப்பால், அறிவுத் திறமையால் உருவாக்கியது என்று என்னக்கூடாது, பிறரிடமும் அவ்வாறு கூறவும் கூடாது, நாம் உலகில் பலரைக் காண்கின்றோம் அவர்களில் எத்தனையோப் பேர் தங்களது அறிவுத் திமையைக் கொண்டும், உடல் உழைப்பைக் கொண்டும் விடா முயற்சியாக பாடுபடுவர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் உழைப்பின் அளவுக்கு செல்வங்களை ஈன்றிடுவதில்லை, இதனால் விரக்தி அடைந்து போனவர்கள் ஏராளமானோரைக் கானலாம் அறிவுத் திறமையால் செல்வங்களை அடைய முடியுமென்றிருந்தால் இன்று உலகில் செல்வந்தர்களே 90 சதவிகிதத்தினராக இருப்பர். இன்று நிலைமை அவ்வாறில்லை 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் ஏழைகளாகவே உள்ளனர் அவர்களில் அதிகமானோர் அறிவாளிகளாகவும் இருப்பர்.

தனது தேவைக்கு அதிகமான செல்வங்களை ஈன்றவர்கள் அவைகளை அல்லாஹ் வழங்கினான், தனது அறிவுத் திறமையால் அடையவில்லை என்று சிந்திக்க வேண்டும், அப்படி சிந்தித்தால் தர்ம சிந்தனை மனதில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். தான் உருவாக்கியவைகள் என்கிற மமதை மனிதனுக்கு ஏற்ப்படுமாயின் அச்செல்வங்கள் குறிப்பிட்ட ஒரு வரையரைக்குள் முடங்கி விடும். இஸ்லாம் கூறும் தர்மமும், சகோதரத்துவமும் முடங்கிப்போய்விடும் இன்று இப்படித்தான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏழை முஸ்லீம்களும் கையேந்துபவர்களாகி விட்டனர். இங்கே இன்னொரு ஹதீஸைக் குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

மனிதன் என்னுடையது , என்னுடையது என்கிறான். மனிதனே ! நீ உண்டு கழித்தவற்றையும் , உடுத்திக் கிழித்தவற்றையும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தவற்றையும் தவிர உன்னுடையது என்று ஏதும் உண்டா ? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்கிர் (ரழி) நூல் : முஸ்லிம்

மனிதன் இவ்வுலகிற்கு வரும் போது எதைக் கொண்டு வந்தான் என்பதை மிக முக்கியாக கவனிக்க வேண்டும், அதே போல் திரும்பிச் செல்லும் போதும் எதை எடுத்துச் செல்கின்றான் ? என்பதையும் கவனிக்க வேண்டும் வரும் பேர்தும் போகும் போதும் விரித்த வெரும் கை தான். இடைப்பட்ட நாட்களில் உண்டு கழித்தவற்றையும், உடுத்திக் கிழித்தவற்றையும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தவற்றையும் தவிர உன்னுடையது என்று ஏதும் உண்டா ? என்று கூறும் நபிமொழியை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். வரும் போதும் கொண்டு வராத, திரும்பி போகும் போதும் எடுத்துச் செல்ல முடியாத இடையில் இறைவனால் கொடுக்கப் பட்ட நம்மைச் சாராத ஒன்றை நம்முடைய அறிவைக் கொண்டு திறமையைக் கொண்டு அடைந்ததாக மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமுண்டோ ? அவ்வாறு இறைவனுடைய மாபெரும் கிருபையால் நமக்கு கிடைக்கப் பெற்றதை நமது சகோதரனுக்கு பங்கிட்டு வழங்கி அவனுடைய சந்தோஷத்தை அடைந்து கொள்ளாதது ஏன் சிந்தித்தால் தெளிவு பெறலாம்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட் கொடைகளில் தான் உண்டு புசித்தது போக மீதியில் சிலதை தனது வாரிசுகளுக்கு ஒதுக்கி விட்டு மீதியை தர்மம் செய்து விடுவது முஸ்லீமுக்கு சிறந்த பண்பாகும். காரூனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையை நமக்கு உதாரணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் சுப்ஹான ஹூவத்தாலா குர்ஆன் நெடுகிலும் நபிமார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைளையும் பல ஊரார்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் சுட்டிக் காட்டுவதன் நோக்கம் மனிதர்கள் அவைகளை தங்களது இன்றைய வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்வதற்காகவேயன்றி வேறில்லை.

ஆனால் இன்றைய சமுதாயத்தவர்களோ குர்ஆனில் கூறப்படும் சரித்திரச் சான்றுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பொழுது போக்குப் போன்று படித்து விட்டு அதை விட்டு விடுகின்றனர் பெரும்பாலானோர் அவைகளை படிப்பதுமில்லை,

தனக்குகிடைக்கப் பெற்றது இறைவனுடைய அருட்கொடை என்பதை மறந்து விட்டு தன் முயற்சியால், தனது திறமையில் ஈன்றது என்றும், தனது முன்னோர்களுடையது என்றும் கொடுக்க மனமில்லாமல் பொய் சொன்னால் கொடுத்தவற்ற அல்லாஹ் மீண்டும் பறித்துக்கொண்டு பழைய நிலைக்கே திருவோடு தூக்க விட்டு விடுவான் என்பதையே மேற்காணும் அல்லாஹ்வை மறநத பனூஇஸ்ரவேலர்களுடைய சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறான்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلاَّ مَنِاتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ {42}
எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. திருக்குர்ஆன். 15: 42
இறைநம்பிக்கைக்கு இது ஒரு  எடுத்துக்காட்டாகும்.


உங்களில் முன் வாழ்ந்த மக்களில் மூவர் தூர பயணத்தில் இருக்கும் போது இரவாகி விட்டது ஒரு குகையில் இரவைக் கழிக்க  நாடி அதில் நுழைந்தார்கள். அப்பொழுது ஒரு பாறாங்கல் உருண்டோடி வந்து அக்குகையின் வாசலை அடைத்து விட்டது. அல்லாஹ்விடம் பிரார்ப்பிப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தனர்

அவர்களில் ஒருவர் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர் அவ்விருவருக்கும் முன்பதாக நானோ, எனது மனைவி பிள்ளகளோ, எனது அடிமைகளோ உண்ண மாட்டோம். ஒரு நாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன் நான் திரும்பி வருவதற்குள் அவர்கள் இருவரும் உறங்கி விட்டனர் அவர்களுக்காக பாலைக் கறந்தேன் அவர்களை எழுப்புவதைஅல்லது அவர்களுக்கு முன்பதாக நாங்கள் அருந்துவதை விரும்பாமல் எனது பெற்றோர் விழிக்கும் வரை (வைகறை வரை) காத்திருந்தேன் அவர்கள் விழித்ததும் அவர்களுக்கு புகட்டினேன் அதன் பிறகே நாங்கள் அருந்தினோம். இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை எங்களை விட்டும் அகற்றுவாயாக! எனக்கூறியதும் பாறாங்கல் ஓரளவு நகர்ந்தது
 
இரண்டாமவர் கூறினார் இறைவா ! எனது உறவுக்காறப் பெண்ணொருத்தி அவள் எனக்கு   மிகப்பிரியமானவளாக இருந்தால் ஆண்கள் பெண்களை நேசிப்பதில் மிக அதிகமாக அவளை நான் நேசித்தேன் பின்னர் நான் அவளை எனது இச்சைக்காக நாடினேன் எனினும் அவள்(எனது ஆசைக்கு இணங்க) மறுத்து விட்டாள். பின்னர் பஞ்சமான ஓர் ஆண்டு வந்தது அப்பொழுது அவள் என்னிடம் வந்து பொருளாதார உதவிக் கோரினாள் அப்பொழுது அவள் எனக்கு விதித்த தடையை நீக்கி விட வேண்டும் எனக் கூறி அவளுக்கு 120 பொற்காசுகளைக் கொடுத்தேன் அவளும் சம்மதித்து பெற்றுக்கொண்டால் அவளை நெருங்கும் பொழுது அல்லாஹ்வை பயந்து கொள் ! முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! எனக்கூறினாள் அல்லாஹ்வுக்கு பயந்துகொள் என்று சொன்ன மாத்திரத்திலேயே நான் விலகி விட்டேன் அத்துடன் அவளிடம் கொடுத்த பொற்காசுகளையும் அவளிடமே விட்டும் விட்டேன் இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை விலகச் செய்திடுவாயாக ! எனக் கூறியதும் மீண்டும் ஓரளவு விலகியது.

மூன்றாமவர் கூறினார் இறைவா! நான் பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கினேன் அதில் ஒருவர் மட்டும் அவருடைய கூலியை வாங்காமல் சென்று விட்டார் எனினும் அவரது கூலியை எனது பண்ணையில் தனியாக முதலீடு செய்து அதனுடைய வரவு செலவை பாதுகாத்து வந்தேன் அதிலிருந்து பல செல்வங்கள் பெருகி வந்தன. சில காலத்துக்குப் பிறகு அந்த வேலையால் என்னிடம் வந்து ஓ இறை அடியாரே ! எனது கூலியை நிறைவேற்றுவீராக ! என்று கூறினார் அதற்கு நான் நீர் பார்க்கும் இந்த ஒட்டகைகள்,   மாடுகள்,   ஆடுகள்   அடிமைகள்  அனைத்தும்  உனது  சொத்துக்கள் தான்  என்றேன்.  அதற்கவர் ஓ இறை அடியாரே என்னை நீர் கேலி செய்கிறீரா? என்றார் அதற்கு நான் உம்மை கேலி செய்ய வில்லை உண்மையைத்தான் சொல்கிறேன் என்றேன். பிறகு நான் கூறியபடியே  அவரது எல்லாப்பொருள்களையும் எடுத்து சென்றார் அதில் அவர் எந்தப் பொருளையும் விட்டு செல்ல வில்லை. இறைவா! இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் எங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையை எங்களை விட்டு அகற்றுவாயாக! என்றதும் பாறாங்கல் முழுமையாக நகர்ந்தது.

அவர்கள் அனைவரும் அக்குகையிலிருந்து அல்லாஹ்வை தியானம் செய்தவர்களாக வெளியேறினர். அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூற கேட்டதாக உமர் ( ரலி ) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: புகாரி, முஸ்லிம்

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்...

இறைவன் நாடினாலன்றி இதிலிருந்து மீள முடியாது என்ற முடிவுக்கு வந்த அம்மூவரும் இறைதிருப்தியை மட்டும் நோக்கமாகக் கொண்டு உலகில் செய்த நற்செயல்கைளைக் கூறி ஏகஇறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கினர் அவ்வாறு பிரார்த்திக்கத் தொடங்கியதும் ஏகஇறைவன் தனது கருணையால் அவர்களை சூழ்ந்து கொண்டு மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து மீட்டுகிறான்.  

முதல் நபர்: தன் வயதான தாய், தந்தையரை சாப்பிட செய்தப் பிறகே அவரும் அவரது மனைவிப் பிள்ளைகளும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும் வெளியிலிருந்து தாமதித்து வந்த அன்றைய ஒரு நாளாவது தானும், தனது குழந்தைகளும் சாப்பிட்டிருந்திருக்கலாம் ஒரு நாள் என்பது அது தொடர்ந்து விடக் கூடாது என்றுக் கருதியவர் தன்னிடத்தில் இருக்கும் அந்த நற்செயலை விட்டு விடாமல் அன்றைய தினம் பட்டினியாகவே உறங்கி விடுகிறார் இந்த நற்செயல் அல்லாஹ்வுக்குப் பிடித்திருந்தது,

மூன்றாமவர்: தன்னிடம் கூலி பெறாமல் சென்ற தொழிலாளியுடைய கூலியை அடைய நினைக்காமல் அந்தப் பணத்தை தனியே ஒதுக்கியும் வைக்காமல் தன் நிருவனத்திலேயே முதலீடாக்கி அது பல்கி பெருகிய பின் அத்தொழிலாளி வந்து முறையிட்டதும் குறைந்த பட்சம் லாபங்களைப் பெற்றுக் கொண்டு கூலியை மட்டுமாவது கொடுத்தனுப்பி இருக்கலாம். அதை மட்டுமே அவரும் கேட்டிருந்தார் ஆனாலும் அவருடைய கூலியில் முதலீடு செய்து தான் இந்த மந்தையை உருவாக்கினார் என்பதை அத்தொழிலாளி அறிந்திருக்க வில்லை ஆனால் அல்லாஹ் அறிந்திருந்தான் என்பதால் அல்லாஹ்வை முறையாக பயந்தவர் அனைத்தையும் அப்படியே அத்தொழிலாளியிடம் கொடுத்தனுப்பி விடுகிறார் இந்த நற்செயல் அல்லாஹ்வுக்குப் பிடித்திருந்தது.

இரண்டாவது நபர்: தனது நேசத்துக்குரியப் பெண் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த பொழுது அதற்காக அதிக விலை கொடுத்திருந்த போதிலும் அப்பெண்ணை அடைவதற்காக நெருங்கிய பொழுது அல்லாஹ்வை பயந்து கொள் முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! என்று அப்பெண் கூறியதும் அவர் விலகிக் கொண்ட நற்செயல் அல்லாஹ்வுக்குப் பிடித்திருந்தது.

மேற்காணும் முதல் நபர், மற்றும் மூன்றாவது நபருடைய நற்செயல்கள் மனமிருந்தால் யார் வேண்டுமானால் இறையருளுக்காக செய்து விட முடியும். ஆனால் இரண்டாவது நபருடைய நற்செயல் என்பது அந்த இறுதிக் கட்டத்தில் தடுத்துக் கொள்வது மிகக் கடினமானதாகும். 

தான் நேசிக்கும் விருப்பமானப் பெண்ணை அடையக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் யாரும் நழுவ விடவே மாட்டார்கள். அதிலும் தான் ஒரு வசதிப் படைத்தவராக இருந்து அல்லது வசதிப் படைத்தவருடைய மகனாக இருந்து அதிலும் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக அந்தப் பெண்ணே தன்னை நாடி வந்தால் இன்னும் சொல்ல வேண்டிய தேவையே இருக்காது தான் விரித்த வலையில் தாமாக வந்து வீழ்ந்த புள்ளி மான் எனக் கருதி அவர் நினைத்ததை சாதித்துக் கொள்வார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பலப்பெண்கள் இவ்வாறே அதிகபட்சம் பணக்காரர்களால் சீரழிக்கப்படுவதை இன்றுப் பார்க்கிறோம். இங்கும் அதே நிலை உருவாவதுடன் ஒப்பந்தமும் இருவரால் போடப்பட்டு விடுகிறது. ஆனாலும் இறைபக்தியாளரான அப்பெண் இறுதியாக அல்லாஹ்வை பயந்து கொள் முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே!   என்று இறைவனை முன்னிலைப் படுத்தி முயற்சி செய்கின்றார்.

பொதுவாகவே வறுமை வந்து விட்டால் அதிகமான மக்களுக்கு இறைவன் மீது அதிருப்தி ஏற்பட்டு விடும் அதிலும் பஞ்சகாலத்தில் சிக்கிக் கொண்டால் சொல்லவேத் தேவை இல்லை பக்கத்தில் உள்ள  செழிப்பான நாட்டைப் பார்த்து இன்னும் அதிகமாக இறைவன் மீது அதிருப்தி அடைவார்கள்.

ஆனால் பஞ்சத்தில் அடிப்பட்ட இப்பெண்மனி அவ்வாறு இறைவன் மீது அதிருப்தி அடையாமல்  இறுதிவரை இறைவன் உதவுவான் என்ற உறுதியான இறைநம்பிக்கையில் இருந்தார் அதனால் இறைவன் அவரை பாவத்திலிருந்தும் மீட்டான் வறுமையையும் துடைத்தான்.

அவரும் இறைநம்பிக்கையாளரே
தனது பஞ்சத்திற்கு உதவித் தேடி அவரை நாடுவதென முடிவு செய்வதற்கு முன்னர் தன்னை அடைய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது என்பது அப்பெண்ணுக்கு நன்றாகவேத் தெரியும்.

பல வருடங்கள் கடந்து விட்டதால் அவருடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்திருப்பார், அத்துடன் அவர் உறவுக்காரர் என்பதாலும், வசதிப் படைத்தவர் என்பதாலும் வேறு வழியின்றியே உரிமையுடன் அவரை நாடுவதென முடிவு செய்திருப்பார்.

ஆனால் அவருடைய மனநிலையில் மாற்றமில்லை என்பதை அவரை அணுகியப் பின்னர் உறுதியாகத் தெரிய வருகிறது ஆனாலும் தனக்கு கொடுக்கப்படுவதாக வாக்களித்த 120 பொற்காசுகள் தன்னுடைய பஞ்சத்தை மொத்தமாக துடைத்தெறிவதற்கு போதுமானதாக அமைந்திருந்தது.

ஓருப் பக்கம் பஞ்சத்தின் கோரப் பிடி ,
மற்றொருப் பக்கம் இறையச்சம்,

இந்த நெருக்கடியான நேரத்திலும் அவர் இறைவனுடைய பாதுகாப்பைக் கோரினார்.

அப்பெண் கூறிய சிந்தனையைத் தூண்டும் அந்த இரண்டு வார்த்தைகளை செவியுற்றவர் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்காக எழுந்து விடுகிறார்.

இது இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக சாத்தியமே !
இறைமறுப்பாளர்களுக்கு அல்லது இறைபக்தியாளர் போன்று வேடமிடுபவர்களுக்கு சாத்தியமாகாது !

120 பொற்காசுகளைக் கொடுத்து ஒப்பந்தம் செய்தப் பின்னரே அப்பெண்ணிடம் அவர் நெருங்குகிறார் இந்த நேரத்தில் அல்லாஹ்வை பயந்துகொள் என்றுக்கூறுவதால் அவர் இறைமறுப்பாளராக அல்லது வேடதாரியாக இருந்திருந்தால் அப்பெண்ணின் மீது அவருக்குக் கோபம் தான் வரும், கைநீட்டிப் பணம் வாங்கும்போது இறையச்சத்தையும், இது அடுத்தவனுக்கு உரிமையானது என்பதையும் தெரிந்திருக்க வேண்டாமா ? இப்பொழுது என்ன உனக்கு ஞானோதயம் பிறந்து  விட்டது என்றுக் கூறி எளிதாக அடைய நினைத்ததை பலவந்தப் படுத்தி அடைவார். இறுதியில் இளம்பெண் கற்பழித்துக் கொலை என்று ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவரும்.

ஆனால் இவருக்கோ கோபத்திற்கு பதிலாக அவ்விரு வார்த்தைகளால் இயைச்சம் மேலிடுகிறது அதனால் அதிலிருந்து விலகி விடுகிறார் அத்துடன் அதற்கு பகரமாக கொடுத்த 120 பொற்காசுகளையும் திரும்பப் பெறாமல் அப்பெண்ணிடமே விட்டு விடுகிறார். அவர் இறைநம்பிக்கையாளராக இருந்தக் காரணத்தினால் தான் இது சாத்தியப்பட்டது.

அடுத்தவனுக்குரியதை அடைய நினைப்பது
இறைவனை அஞ்சக் கூடிய மக்களாக இருந்தால் அவர்களிடம் அடுத்தவனுக்குரியதை அடைய நினைக்கும் சிந்தனை அறவே வராது.

தாமாக முயற்சித்தாலும் சரி,
தாமே வலிய வந்து ஒப்படைத்தாலும் சரி,
இரண்டில் எதுவாக இருந்தாலும்,

அவளுடைய கற்பு அடுத்தவனுக்குரியது என்ற சிந்தனை இருபாலாருக்கும் வரவேண்டும்.

உயிருக்கு உயியாய்,  இடுகாடு வரை உற்ற துணையாய்  வருகின்ற துணைவனுக்கு உரிமையானதை உரிமையற்றவனுடைய பசப்பு வார்த்தைகளில் மயங்கி அர்ப்பணித்து விடக்கூடாது.

கற்பை பேணிப பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இது தனது துணைவனுக்கு மட்டும் உரிமையானது  என்ற உறுதியுடன் இருந்ததால் தான் பஞ்சத்திற்கு பணம் கொடுத்துதவியவனுக்குக் கூட தனது கற்பை அர்ப்பணிக்க மனமின்றி இறைவனிடம் பாதுகாப்புக் கோரி தன்னுடைய கற்பை பாதுகாத்துக் கொண்ட இப்பெண்மனியுடைய செயல் மிகப் பெரிய எடுத்துக் காட்டாகும்.

இப்பெண்மனியுடைய தூய எண்ணம் காரணமாகவே இவரை பலவருடங்களாக அடையத் துடித்தவருடைய மனநிலையில் இறைவன்  மாற்றத்தைப் போட்டு அப்பெண்ணை பாதுகாத்தான்.  

உறுதியான இறை நம்பிக்கை  வேண்டும்.
வறுமையின் காரணத்தால் வசதி படைத்தோரின் ஆளுமைக்கும், அத்துமீறலுக்கும் அடிபணிந்திடாது இறைவனின் பேராற்றலின் மீது நம்பிக்கை கொண்டு மனம் தளராமல் இறுதிவரை அவனிடம் பாதுகாப்புக் கோர வேண்டும் என்பதற்கு பஞ்ச காலத்தில் ஏற்பட்ட வறுமை நிலையிலும் இறைவனின் பேராற்றல் மீது அவநம்பிக்கை அடைந்து விடாமல் உறுதியான நம்பிக்கையில் இருந்த அப்பெண்ணுடைய இறைநம்பிக்கையும், நெருக்கடியான நேரத்தில் எதிரியுடைய சிந்தனையை திசை திருப்பும் திறமையான நாவண்மையும் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

இறைநம்பிக்கையளர்கள் மட்டுமே இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனை நிணைவு கூறுவார்கள். இப்படிப்பட்ட இறைநம்பிக்கைளர்களை இறைவன் ஒருப்போதும் கைவிட மாட்டான் என்பதற்கு மேற்காணும் இருவரையும் பாவக்கரைப் படிவதற்கு முன் காப்பாற்றி விட்டது எடுத்துக் காட்டாகும். .....அநீதி இழைத்தோர் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். (தன்னை) அஞ்சியோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன். திருக்குர்ஆன்  45:19.

ஷைத்தான் மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டே தான் இருப்பான்''என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான்.26 திருக்குர்ஆன் . 15: 39, 40.

அவர்களும் மனிதர்கள் என்கின்ற ரீதியில் அவனது வலையில் வீழ்வதற்கு இருந்தனர் ஆனாலும் அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தக் காரணத்தால் அவர்களை இறைவன் பாதுகாத்தான்.  எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. திருக்குர்ஆன். 15: 42

இறைநம்பிக்கையாளர்களை ஷைத்தானின் வழிகேட்டிலிருந்து பாதுகாப்பது இறைவன் பொறுப்பில் உள்ளதாகும் என்பதால் இவ்வுலகில் நாம் வாழுகின்ற காலத்தில் உறுதியான இறைநம்பிக்கையாளர்களாக வாழ முயற்சித்தால் நாமும் மனிதர்கள் என்கின்ற ரீதியில் எபபொழுதாவது ஷைத்தானின் தூண்டுதலால் வழி சருக்க நேரிட்டால் அதிலிருந்து இறைவன் நம்மைப் பாதுகாத்து விடுவான் என்பதற்கு மேற்காணும் இரண்டு இறைநம்பிககையாளர்களை இறைவன் பாதுகாத்த சம்பவம் நமககுப் பெரியப் படிப்பினையாகும்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُواحَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

 பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! ''இந்த ஏட்டுக்கு என்ன வந்தது ? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக்கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். திருக்குர்ஆன். 18:49

ஜூஹைனிய்யா கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்மனி விபச்சாரத்தில் ஈடுபட்டதின் காரணமாக கர்ப்பினியாகி விட்டார். அப்பெண்மனி அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் சமூகம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! நான் ''ஹத்து'' எனும் கடும் தண்டனைக்குரிய குற்றத்தை செய்து விட்டேன். என் மீது தண்டiயை நிறைவேற்றுங்கள் என்று கூறினார்.(அதனைத் தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினரை அழைத்து இப்பெண்ணுக்கு உபகாரம் செய்வீராக! இப்பெண்மனி குழந்தையைப் பெற்றெடுத்ததும் என்னிடம் வருவீராக ! எனக் கூறினார்கள். அவரும் அதேப்போன்று செய்தார். (அதனைத்தொடர்ந்து) அப்பெண்ணிற்குரிய தண்டனையை நிறைவேற்றக் கட்டளையிட்டார்கள். அப்பெண்ணின் ஆடைகள் அப்பெண்ணின் மீது கட்டப்பட்டு ''ஹத்து '' நிறைவேற்றப்பட்டது. பின்னர் அண்ணலார் அப்பெண்மனிக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம்  அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்பெண்மனிக்காத் தொழ வைக்கிறீர்கள் ? இப்பெண்மனி விபச்சாரம் செய்தவராயிற்றே! எனக்கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அந்தப்பெண்மனி மாபெரும் தவ்பா செய்துவிட்டார். அது எத்தகைதென்றால், அது மதீனா வாசிகளில் எழுபதுபேர்களுக்கு பங்கிடப் பட்டாலும் விஸ்தீரணமானதாக இருக்கும் அப்பெண்மனி தனது ஆன்மாவை அல்லாஹ்வுக்காக பரிசுத்தப் படுத்தியதை விட சிறந்த அமலை நீர் காண்பீரா ? என்றார்கள். அபூ நுஜய்து இம்ரான் பின் ஹூஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்.முஸ்லிம்.


பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன் அரபுலகில் விபச்சாரம், கற்பழிப்பு போன்ற தீயச் செயல்கள் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராக உலகிற்கு வருகை தந்தப்பின் குறுகிய காலகட்டத்தில் அவைகள் அனைத்தும் துடைத்தெறியப் பட்டன. குறுகிய காலகட்டத்தில் அவைகள் அனைத்தையும் துடைத்தெறியப்பட்டதற்கு எது காரணமாக இருந்தது ? தீமையில் மூழ்கிக் கிடந்த மக்களுடைய மத்தியில் இறைத்தூதர் அவர்களால் ஆழமாக வேரூன்றச் செய்த மறுமை சிந்தனை !

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா ? திருக்குர்ஆன் 6:32

தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?
இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?
குறிப்பிட்ட காலம் வரை அதை பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?
நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். திருக்குர்ஆன். 17:14 லிருந்து 24 வரை.

உலக வாழ்வு நிரந்தரமல்ல, மறுஉலக வாழ்வே நிரந்தரமானது,
நிரந்தரமான மறுஉலக வாழ்வில் நிம்மதியான வாழ்வை அடைந்து கொள்ள வேண்டுமெனில் அங்கு நடத்தப்படும் விசாரணையில் வெற்றிப் பெறவேண்டும். அங்கு நடத்தப்படும் விசாரணையில் வெற்றிப்பெற்றால் மட்டுமே சொர்க்கத்தில் நிம்தியாக வாழமுடியும்,

விசாரணையில் தோல்வியடைந்தால் நரகில் தள்ளப்பட்டு நிரந்தரமாக வேதனையை அனுபவிக்க நேரிடும். மறுமை வாழ்வை பொய்யென நினைத்து உலகில் தவறான வழியில் சுகம் அனுபவித்தால் இறுதித் தீர்ப்பு நாளில் கேடு தான். என்ற இறைவனின் சத்தியச் செய்தியை அந்த மக்களுடைய மத்தியில் இறைத்தூதர் அவர்கள் ஆழமாக விதைத்தக் காரணத்தால் அதில் நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களுடைய குற்றச் செயலிலிருந்து முழுமையாக விடுபட்டனர்.

முழுமையாக விடுபட்டப்பின்னரும் சிலநேரங்களில், சிலர் ஷைத்தானுடைய தூண்டுதலால் இறைவனால் தடுக்கப்பட்ட சிலக் குற்றங்களை செய்து விட்டால் அதற்காக இறைவனிடம் அழுது பாவமன்னிப்புக் கேட்டு, அல்லது அதற்கான குற்றவியல் தண்டனையை உலகிலேயே பெற்று தங்களை பரிசுத்தப் படுத்திக்கொண்டு மறுஉலக விசாரணையில் இலகுவாக வெற்றிப் பெறுவதற்காக முணைவார்கள். அப்படிப்பட்ட ஒரு தியாக சம்பவம் தான் மேற்கானும் சம்பவம்.

சத்தியத்துடன் அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் அவர்களுடைய இஸ்லாமிய நீதிமன்றத்தில் கதவுகளைத் தட்டிய வித்தியாசமான வழக்கது.

இன்றுப் பார்க்கின்றோம்.
நாம் வாழுகின்ற இந்த உலகில் யாராவது ஒருவர் தான் செய்த குற்றத்திற்காக தாமாக வந்து காவல் நிலையத்தில், அல்லது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் சரணடைந்தால் அதில் பல சுயநலக் காரணங்கள் இருக்கும், பொதுநலக் காரணங்கள் இருக்காது.
  1. குற்றம் கண்டுப் பிடிக்கப்பட்டு தலைமறைவாகி காவலர்களால் தொடர்நது தேடப்பட்டு வரும் வேளையில் காவலர்களுடைய மரண அடியிலிருந்து தப்பித்துக கொள்வதற்காக சரணடைவார்,
  2. அல்லது கொலை செய்துவிட்டு இரத்தம் சொட்டும் அரிவாளுடன் தண்டனைய குறைப்பதற்காக காவல் நிலையத்தில் சரணடைவார்.
இதுப்போன்ற இன்னும் பல சுயநலக் காரணங்களுக்காக குற்றவாளிகள் தாமாக சரணடைவதைக் காண்கிறோம்.

இன்று தங்களை தக்வாதாரி (இறையச்சமுடையயோர்) என்று காட்டிக்கொள்ளக்கூடிய எத்தனையோப் பேர் தங்களுடைய குற்றங்களை வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து செய்கின்றனர் மாட்டிக் கொண்டால் கூட வாதத் திறமையால் மறைத்து விடுகின்றனர், அதையும் மீறி வழக்காடு மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் வாதத் திறமையுடன் வாதிடுகின்ற வக்கீலை வைத்து செயலிழக்கச் செய்து விடுகின்றனர். இன்னும் எத்தனையோ வழிமுறைகளில் கையும், களவுமாக கண்டுப் பிடிக்கப்பட்டக் குற்றங்களைக்கூட ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு தங்களை நிரபராதிகள் என்று மக்களிடம் அறிவிக்கச் செய்து விடுகின்றனர்.

இவர் மட்டும் ஏன் தாமாக சரணடைந்தார் ?
அதுவும் பொதுமக்கள் முன் கேவலப்பட்டு, சரீரம் முழுவதும் கடுமையான கல்லெறித தாக்குதலுக்குட் படுத்தப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட மரணத்தைத் தழுவும் தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கு எதனால் முன் வந்தார் ?

நமக்கேத் தெரியாமல் நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாப் பதிகின்ற பதிவேடு (Flash memory ) நமக்குள் இருப்பதைக் கூறும் இறைச்செய்தி இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்தப் பெண்மனி வாழ்ந்தார்.  பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! ''இந்த ஏட்டுக்கு என்ன வந்தது ? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக்கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். திருக்குர்ஆன். 18:49

இறைவனால் மனிதகுலத்திற்கு தடைசெய்யப்பட்ட மொத்த சமுதாயத்திற்கும் தீங்கு இழைக்கக்கூடிய தீமையாகிய விபச்சாரத்தில் ஈடுபட்டதை வேறுயாரும் பார்க்கவில்லை என்றாலும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதுடன் தன்னிடம் இருக்கும் பதிவேட்டிலும் (Flash memory) பதிந்திருக்கும் அதை நாமே எடுத்து வாசிக்கும் நிலை மறுமையில் ஏற்படும்

 ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். திருக்குர்ஆன் 17:13.

உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்). திருக்குர்ஆன் 17:14
  • உலகம் அழிக்கப்பட்டு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாளில் நிகழவிருக்கும் விசாரணை மற்றும் இன்னப்பிற விஷயங்கள் பற்றியும்,,
  • யாரும், யாருக்கும் சிபாரிசு செய்ய முடியாத நிலைப் பற்றியும்,
  • உலக அதிபதியாகிய இறைவனுடைய வல்லமை மட்டும் மேலோங்கி நிற்கும் நிலை பற்றியும் துல்லியமாக இறைத்தூதர் வாயிலாக அப்பெண்மனி அறிந்திருந்த காரணத்தால்
இவ்வுலகில்
ஊர் மக்கள் முன்னிலையில் நிருத்தப்பட்டு கேவலப் படவிருப்பதைப் பற்றியோ, இவ்வுலகில் கல்லெறி மூலமாக தனது உடல் சுக்கு நூராகப் பிய்த்தெறியப்பட்டு வேதனையை அனுபவிக்கவிருப்பது பற்றியோ, கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் மறுஉலக நிரந்தர வாழ்வுக்காக உலகின் அற்ப வாழ்வை துச்சமாக்கினார். தன்னுடைய உயிரையும் அர்ப்பனம் செய்யத் துணிந்தார் இதுவே இறையச்சத்திற்கு மிகப் பெரிய ஓர் எடுத்துக் காட்டாகும்.

அவர்களில் ஒரு சிலரை மற்றும் சிலரை விட எவ்வாறு சிறப்பித்துள்ளோம்'' என்பதைக் கவனிப்பீராக! மறுமை வாழ்வு மிகப்பெரிய தகுதிகளும், மிகப்பெரிய சிறப்புக்களும் கொண்டது. திருக்குர்ஆன் 17:21

அன்று மதீனத்து மக்களே உலகின் பிற மக்களுக்கு இறைநம்பிக்கைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் அந்த முன்மாதிரி இறைநம்பிக்கையாளர்களுடைய நம்பிக்கையை விட 70 மடங்குக்கு இவருடைய நம்பிக்கை அதிகமானது என்று இறைத்தூதர் அவர்களே சிலாஹித்துக் கூறி அப்பெண்மணியுடைய ஜனாஸாவுக்கு தொழவைக்கவும் செய்தார்கள் என்றால் கருணைக் கடலாம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய கருணைக்கும் இது ஓர் எடுத்துக் காட்டாகும்.

ஓட்டக ஓட்டிகள், காட்டரபிகள், குற்றப் பரம்பரையினர் என்று பிற சமுதாயத்தவர்களால் தூற்றப்பட்ட சமுதாயத்தினரை குற்றமற்றவர்களாக, நேர்மையாளர்களாக நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் நன்மக்களாக வெறும் 23 வருடங்களில் ( அதிலும் 10 வருட மக்கா வழ்க்கையில் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு முடக்கப்பட்டிருந்தனர் ) மாற்றிக் காட்டிய வரலாறு பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தவிற உலகில் வேறெவருக்கும் இல்லை.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து, முஹம்மதுக்கு அருளப்பட்டது தமது இறைவனிடமிருந்து (வந்த) உண்மை என நம்புவோருக்கு அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் அவன் நீக்குகிறான். அவர்களின் நிலையைச் சீராக்குகிறான். திருக்குர்ஆன் 47:2
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்