வியாழன், நவம்பர் 03, 2011


الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. திருக்குர்ஆன்: 13:28

இறைவனை நினைவு கூரக்கூடிய இதயமே அமைதி பெறுகிறது
இறைவனை மறந்த இதயம்  அலைமோதுகிறது
உலகில் அனைத்து வளங்களையும் ஒருங்கேப்பெற்ற செல்வந்தனாகிலும் சரி, அன்றாடங் காய்ச்சியாகிலும் சரி, அல்லது அதையும் பெற்றுக் கொள்ள முடியாத யாசிப்போராகிலும் சரி, அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையை எதிர் கொள்பவர்களாகவே இருக்கின்றனர்.

செல்வந்தர்களின் மனநிலை
ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கி சின்னப் பின்னப் படுத்தி, தனது கைப்பாவையை ஆட்சியில் அமர்த்திய சில தினங்களில் ஆப்கானிஸ்தானின் ராட்சத மலைப் பொதும்புகளிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்களால் தினந்தோறும் சல்லடையாக்கப்பட்டு கூடை கூடையாக அல்லப்படும் அமெரிக்க ரானுவ வீரர்களின் சடலங்களைக் கண்டு ஒழித்துக் கட்ட வேண்டியவர்களை ஒழித்துக்கட்ட முடியவில்லையே என்ற மனக்கவலை ஒரு புறம்,

ஈராக்கை அடித்து சல்லடையாக்கி சதாமை தூக்கிலிட்ட அடுத்த கணமே தலைதூக்கிய ஈரானுடைய டார்ச்சரை பதவியை விட்டு இறங்குவதற்கு முன் ஒரு கை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற மனக்கவலையில் உறைந்திருக்கும் சர்வதேச குண்டன் ஜார்ஜ் புஷ்ஷின் மனக் கவலை.

ஹெலிகாப்டர் இறங்கி செல்வதுப் போன்று சுமார்  400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் பிரதானப் பகுதியில் வடிவமைத்த உல்லாச பங்களாவின் மாடியின் மீது ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அரசு அனுமதி மறுத்து விட்டதால் அது மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக இன்று உலகில் பணக்காரர்களுடைய வரிசையில் முண்ணனியில் இருக்கின்ற அம்பானி சகோதரர்களுடைய மனக் கவலை.

இணைந்திருக்கும் போது டாட்டாவை மிரட்டினோம் பிரிந்தப் பின் ஒரு ஆட்டோக் காரனைக் கூட மிரட்ட முடியவில்யே என்று மதுரை மாநகரை தனது சுண்டு விரலில் வைத்து ஆட்டிப்படைக்கும் அழிகிரியைப் பார்த்து ஆதங்கப்படும் உலகின் பணக்காரர்களுடைய வரிசையில் இருக்கும் தயாநிதி மாறனுடைய வெளியில் சொல்ல முடியாத மனக் கவலை.

தனது நாசியிலிருந்து வெளிப்படும் மூச்சுக் காற்றைக்கூட உயிர் தோழியிடம் கேட்டுவிடும்; ஜெயலலிதாவால் அவருக்காக வடிவமைத்த கொடநாடு உல்லாச பங்களாவுக்குள் அவரை அமர்க்களமாக குடியமர்த்த முடியவில்லையே என்ற மனக்கவலை.

இப்படி உலகில் உள்ள பெரும், பெரும் பணக்காரர்கள் அனைவரையும் எதாவது ஒரு மனக்கவலை ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக்கின்றது.

அவர்களைப் பொறுத்தவரை நினைத்ததை சாதித்தே ஆகவேண்டும்; என்று துடிப்பார்கள் அதற்கு காரணம் அவர்களிடம் குவிந்து கிடக்கும் செல்வங்கள்.

நினைத்ததை சாதிக்க முடியவில்லை என்றால் இத்தனை செல்வமிருந்தும் என்னால் இதை சாதிக்க முடியவில்லையே என்று துவண்டு விடுவார்கள். இதுவே மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து அது த்த அழுத்தத்தை ஏற்படுத்தி அது அவர்களுடைய அகால மரணத்திற்கு வித்திடுகிறது.

அன்றாடங்காய்ச்சிகள் ...
  • காலையில் உண்டால் மதியம் இல்லை,
  • மதியம் உண்டால் இரவுக்கில்லை,
என்பவர்களுடைய மனநிலையோ பதட்டத்திலும் பதட்டம்,
  • வாடகை வீட்டில் வசிப்போருக்கு சொந்த வீடு வேண்டும் என்ற மனக் கவலை,
  • சொந்த வீட்டை கட்டி விட்டாலோ ஒரு விளை நிலம் வாங்க வேண்டும் என்ற மனக் கவலை,
இவ்வாறு மனிதர்களுடைய ஆசைகள் விரிவடைய விரிவடைய அந்த ஆசைகளில் சிலது வெற்றிப் பெற பலது தோல்வியை தழுவுவதால் துவண்டு விடுகின்றார்கள்.

மொத்தத்தில் மனிதர்கள் தேவையுடையவர்களாக, அல்லது ஏதாவதொன்றில் அதிருப்தி  அடையவர்களாக இருக்கின்றார்கள் இவைகளே மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன மேல்படி மன அழுத்தமே இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன அது அதிகிரிக்கும் பொழுது உயிருக்கே உலை வைத்து விடுகின்றன.

நாம் அன்றாடம் எதிர்நோக்குகின்ற அனைத்து பிரச்சனைகளையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் மன அழுத்தம் ஏற்படாது.

நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், '(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!'' என்று கேட்டார்கள். நூல்: புகாரி. 3653.

மிகவும் நெருக்கடியான நிலை ஏற்பட்டால் அதைக்கண்டு துவண்டு விடக்கூடாது சில காரியங்களை மனிதன் என்ற முறையில் நம்மால் சாதிக்க முடியும், பல காரியங்களை நம்மால் சாதிக்க முடியாது அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடவேண்டும்.

இறைவனுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக தங்களுடைய உயிரையே பணயம் வைத்துப் போராடும் அந்த சத்திய சீலர்கள் 'தவ்ர்' மலைக்கடியில் உள்ள பாதை வழியாக சென்று அமர்ந்து விடுகிறார்கள் அவர்கள் உட்புகுந்த அந்த பாதையைச் சுற்றியே நீண்ட நேரம் வட்டமிடும் எதிரிகளுடைய பார்வையை கீழ்நோக்க விடாதவாறு அல்லாஹ் தடுத்து விடுகிறான். அதற்கு காரணம் நாம் இருவர் மட்டும் இங்கில்லை நம்முடன் இறைவன் இருக்கின்றான் என்ற பெருமானார்(ஸல்) அவர்களுடைய நம்பிக்கையின் காரணத்தால் இறைவன் தனது ஆற்றலை அங்கு வெளிப்படுத்துகிறான்.

இறைவனை நம்ப வேண்டிய முறையில் நம்பிவிட்டால் அந்த பரம்பொருள் ஒருக்காலும் யாரையும் கைவிடாது என்பதற்கு மேற்காணும் வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் பெரிய முன்னுதாரணமாகும்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திற்காக நிதி திரட்டிக் கொண்டிருந்த போது அபுபக்கர் (ரலி) அவர்கள் ஒரு கைலியை விரித்து வீட்டில் இருந்தவற்றை எல்லாம் அதிலிட்டு அதன் நான்கு மூலைகளையும் கட்டி தோளில் தொங்க விட்டுக் கொண்டு வந்து அண்ணலார் அவர்களிடம் கொடுக்கிறார்கள் வீட்டில் எதையாவது வைத்துவிட்டு வந்திருக்கின்றீர்களா என்று அண்ணலார் அவர்கள் கேட்க ? அதற்கவர்கள் வீட்டில் அல்லாஹ்வை வைத்து விட்டு அனைத்தையும் கொண்டு வந்து விட்டேன் என்ற பதிலை அளிக்கிறார்கள்.

உலகில் உள்ள அனைத்து மக்களுடைய இறைநம்பிக்கையை தராசின் ஒரு தட்டிலும், எனது தோழர் அபூபக்கருடைய இறைநம்பிக்கையை மற்றொரு தட்டிலும் வைத்தால் எனது தோழர் அபுபக்கருடைய ஈமான் நிரப்பப்பட்ட தட்டே கனக்கும் என்று பெருமானார்(ஸல்)அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களுடைய இறைநம்பிக்கையை சிலாஹித்துக் கூறி இருக்கின்றார்கள்.

நாளைக்கு என்ன செய்வது ?
எதிர்காலத்திற்கு எதை விட்டு வைப்பது ? என்ற திட்டமிடலில் இறங்காமல் இன்றைய பொழுதை எவ்வாறு கழிப்பது என்பதையும் கூட இறைவனிடம் ஒப்படைத்து விட்டு வாழ்நாளைக் கழித்த அபுபக்கர்(ரலி) அவர்களுடைய வாழ்நாளில் நடந்த சம்பவங்கள் அனைத்துமே மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாக இருக்கும்.

எந்த ஒரு எதிர்ப்பையும் கண்டு இதை எப்படி சமாளிப்போம் ? என்ற கவலையினால் அவர்கள் துவண்டு விழுந்து விடவில்லை. அவைகள் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் அவர்கள் நோய்வாய்பபட்டதாக வரலாறு இல்லை இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் மலைபோன்ற பிர்ச்சனைகளை எல்லாம் மிக சாதாரணமாக எதிர்கொண்டார்கள். 

வல்ல அல்லாஹ் அவைகளை தூள் தூளாக தகர்த்தெறிந்து மாபெரும் வெற்றியை நல்கச் செய்தான்.

இறைவனை வீட்டில் வைத்து விட்டு எஞ்சி இருந்த செலவங்களை துடைத்து இறைவழிக்கு வாரி வழங்கிய அவர்களுடைய சிந்தனைக்கொப்ப சிறப்பான வாழ்க்கையை இறைவன் அமைத்துக் கொடுத்தான்

ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் மறுமை வாழ்வை மறந்து உலக வாழ்வை வளப்படுத்துவதற்காகவும், அன்றாடம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளிலும் வெற்றி அடைந்த விடவேண்டும், தோல்வி என்பதே நம் வாழ்வில் இருக்கக் கூடாது என்ற வைராக்கியத்தினால் இறைவனை மறந்து தீட்டப்படும் திட்டங்களில் பல தோல்வியை தழுவி விடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

என்ன தான் வழி ?
பொழுது புலர்ந்ததும் உயிர் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறியவர்களாக எழுகிறோம், அப்பொழுதே மாலைப் பொழுது நமக்கல்ல என்ற சிந்தனை வந்து விடவேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்றார்கள்.

''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். நூல்: புகாரி 6416. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள்.


அவ்வாறான சிந்தனை வந்தால் மட்டுமே அதற்கடுத்து தொழுகையை இறையச்சத்துடன் நிறைவேற்ற முடியும், அதற்கடுத்து காலை திக்ரை ஓதமுடியும், அதற்கடுத்து ஹலாலான உணவை தேட முடியும். இதற்கு மேல் எழுகின்ற பண நெருக்கடி, வேலையில் ஏற்படும் நெருக்கடி, குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள், ஆரோக்கியம் அல்லது பாதுகாப்பு தொடர்பான கவலைகள், அந்தரங்க உறவுகளில் ஏற்படுகின்ற சவால்கள்நம்மை எதிர் கொள்ளும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு களப் பணியில் இறங்கினால் இறைவன் வெற்றியை வழங்குவான்.
 
...அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். திருக்குர்ஆன்.4:81

... ''அல்லாஹ் எனக்குப் போதுமானவன் சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருங்கள் என்றுக் கூறுவீராக! திருக்குர்ஆன்.30:38 
.
..  அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.   திருக்குர்ஆன்.4:132


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

புதன், நவம்பர் 02, 2011



وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لاَ يُفْلِحُ الظَّالِمُونَ

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து 'வா!' என்றாள். அதற்கவர் ''அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' எனக் கூறினார். திருக்குர்ஆன் 12: 23.


இறையருளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.


கடந்த எமது இறைநம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்ற தலைப்பில் ஷைத்தானுடைய சதிதிட்டத்தில் பாவம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இறுதிக்கட்டத்தில் இறைவன் அதிலிருந்து தடுத்து விடுவான் என்பதற்கு பனூ இஸர்வேலர்கள் காலத்தில் வாழ்ந்த இரண்டு இறைநம்பிக்கையாளர்களுடைய சம்பவத்தை மேற்கோள் காட்டி எழுதி இருந்தோம்.

இந்தக் கட்டுரையில் இறைத் தூதர் ஒருவரை விடாமல் விரட்டிய ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து இறைவன் தனது அருளால் அவரை மீட்டெடுத்த சம்பவத்தை பார்ப்போம்.

அழகின் பொக்கிஷம் யூசுஃப் (அலை) அவர்கள்
யூசுஃப் (அலை) அவர்கள் சிறுவயதாக இருந்த பொழுது அவர்களுடைய தந்தை யாக்கூப் (அலை) அவர்கள் அவர் மீது அதிகப் பிரியமுள்ளவராக இருந்தார்கள் இதை சகித்துக் கொள்ள முடியாத யூசுஃப் (அலை) அவர்களுடைய பிற சகோதரர்கள் அவரை அழைத்துச் சென்று கிணற்றில் இறக்கினார்கள் அவ்வழியே வந்தப் பயணிகளில் ஒருவர் தண்ணீருக்காக வாளியை கிணற்றில் விடவே கிணற்றுக்கடியிலிருந்து சிறுவர் யூஸூஃப்(அலை)அவர்கள் மேல் நோக்கி சப்தம் கொடுத்து அதை செவியுற்றப் பயணியின் மூலம் இறைவனின் பேருதவியால் வெளியே வந்து விடுகின்றார்கள்.

சிறுவர் யூஸூஃப்(அலை)அவர்களை கிணற்றிலிருந்து வெளிக் கொண்டு வந்தப் பயணக் கூட்டம் எகிப்தில் ஒருவரிடம் அற்ப விலைக்கு விற்று விடுகின்றனர். அற்பவிலை கொடுத்து சிறுவர் யூசுஃப்(அலை) அவர்களை வாங்கியவர் தனது வீட்டில் வளர்க்கின்றார்

சிறுவர் யூசுஃப்(அலை) அவர்கள் வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்ததும் அவர்களின் அழகின் மீது அவரின் மனைவி ஆசைப்பட்டு அவரை அடையத் துடிக்கின்றார்.

சிலர் (அதிகமானோர் அல்ல) இப்படித்தான் விளக்கொளியின் பிரசாசத்தில் விழும் விட்டில் பூச்சிகளைப் போன்று குணம், குலம், கோத்திரம், வயது வித்தியாசம் எதையும் தெரிந்து கொள்ளாமல் அழகில் மட்டும் மயங்கி விடுவார்கள்.

இவ்வாறு அவசரமாக மனதை பறிக் கொடுத்தவர்கள் அவசரமாக மானத்தையும் இழப்பதற்கு துணிந்து விடுவார்கள் ஏமாற்றப்பட்டதும் உயிரையும் மாய்த்துக் கொள்வார்கள். மிகச் சிலர் மட்டுமே இதில் விதிவிலக்காக இதை (மானமிழந்ததை) டேக்இட்ஈசி யாக எடுத்துக்கொள்வார்கள்.

இதில் பெரிய இடத்துப் பிள்ளைகள் செய்யும் சிஷ்மிஷன்கள் வெளியில் தெரிந்தால் பெரிய குடும்பத்து கௌரவம் காற்றில் பறந்து விடக்கூடாது என்பதற்காக எதிராளியை மாட்டிவிட்டு தப்பித்துக் கொள்வார்கள், அதற்காக முன்கூட்டியே சில திட்டங்களை தீட்டி வைத்துக் கொள்வார்கள்.  யூசுஃப்(அலை) அவர்களும் இதுப் போன்றதொரு சதி திட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
 

ஒருநாள் இன்று எப்படியாவது இவரை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு வந்து வாசல் கதவுகளையும் தாழிட்டு விட்டு வற்புருத்தத் தொடங்கினார். எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து 'வா!' என்றாள். திருக்குர்ஆன் 12: 23.

உடன் பிறந்தவர்களால் வஞ்சிக்கப்பட்டு பாலுங்கிணற்றில் வீசி எறியப்பட்டவரை வெளிக்கொண்டு வரச்செய்து அவர் வளர்ந்து ஆளாவதற்கு அழகிய தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஏகஇறைவனுக்கு நன்றி மறப்பதற்கும், இத்தனை வருடங்களாக வளர்த்தெடுத்த தனது எஜமானனுக்கு அநீதியிழைப்பதற்கும் துணிய மறுத்த யூசுஃப்(அலை) அவர்கள் முதலில் இறைவனிடம் பாதுகாப்புக் கோரி விட்டு அந்தப் பெண்ணுடைய மனதை மாற்றி விடுவதற்காக அந்த நேரத்தில் அழகிய சொற்களைக் கொண்டு உபதேசம் (தஃவா) செய்கின்;றார்.

இன்று நாம் பார்க்கி;ன்றோம் ஹவுஸ் பாய், ஹவுஸ் டிரைவர், போன்றவர்களை தொழிலாளியாகப் பார்க்காமல் உறவினர் போல் கருதி தங்களுடைய வீடுகளில் குடியமர்த்திக் கொள்ளும் எஜமானர்களுடைய வீடுகளில் இதுபொன்றதொரு வெறுக்கத்தக்க சம்பவம் நிகழுமானால் நான் என் இறைவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன், என் எஜமானனுக்கு அநீதியிழைக்க விரும்பவில்லை என்றுக் கூறி யாராவது விலகிக் கொள்கின்றனரா ? இதை விடக் கொடுமை அங்கே ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் கூட நடந்ததைப் போன்று வெளியில் வந்து தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களையேப் பார்க்கின்றோம். இறையச்சமும், மறுமை நம்பிக்கையும் அற்றுப் போனதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

யூசுஃப்(அலை) அவர்கள் செய்த உபதேசத்தை அந்த நேரத்தில் அந்தப் பெண்ணால் ஜீரணிக்க முடியவில்லை அதனால் அவைகளைப் புறக்கனித்து விட்டு அவரை மயக்கும் கலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

பெண்கள் பருவம் அடைவதற்கு முன்னரே முடிந்தளவு ஏகஇறைவனின் ஏவல் - விலக்கல் சட்டங்களை எத்தி வைத்து விடவேண்டும் முற்றி விட்டால் எத்தி வைப்பது எடுபடாமல் போய்விடலாம் என்பதற்கு மேற்காணும் யூசுஃப்(அலை) அவர்களை விடாமல் விரட்டிய அந்தப் பெண் ஒருக்கெட்ட உதாரணமாகும்.

யூசுஃப்(அலை) அவர்கள் செய்த உபதேசங்கள் எடுபடாமல் போனதுடன் நேரம் ஆக ஆக  அவர்களுடைய மனநிலையில் அப்பெண்ணின் மயக்கும் கலைகளால் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. 12: 24. அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார்... 


பெரும்பாலும் இப்படி நடக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன காரணம் அன்னிய ஆண் - பெண் இருவர் தனித்திருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுடன் ஷைத்தான் மூன்றாவதாகி விடுவான். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் (திர்மிதீ 1091) 


அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் மட்டுமே அனைத்து விதமான குற்றங்களுக்கும்  அப்பாற்பட்டவன் சாதாரண மனிதர்களிலிருந்து, அவனுடைய தூதர்கள், நேசர்கள் வரை அனைவரும் தவறிழைக்கக்கூடியவர்களே அல்லாஹ் நாடினால் மட்டுமே அவனுக்கு விருப்பமானவர்களை பாவத்தில் நெருக்கி வைக்கும் குற்றச் செயலிலிருந்து காப்பாற்றுவான்.

யார் அவனுக்கு விருப்பமானவர்கள் ?

இத்துடன் முடிந்து விட்டது இனிநடக்கப் போவது ஒன்றுமில்லை என்ற அதிருப்தி அடையாமல் துன்பமே நிகழப்போகின்றது என்று உறுதியாகத் தெரிந்தாலும் இறைவன் எம்மைக் காப்பாற்றுவான் இறைவன் எமக்குப் போதுமானவன் என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோருபவர்கள்.


இங்கில்லை என்றாலும் இதற்காக இருமடங்கு நன்மையை மறுமையில் தருவான் என்ற மனவலிமை மிக்கவர்கள் அவனுக்கு விருப்பமானவர்கள் !


இப்படிப்பட்ட இறைநம்பிக்கையாளர்கள் ஒருநாள் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்வதற்கு தயாராகும் போது, அல்லது செய்வதறியாது திகைத்து நிற்கும்போது அவர்கள் சரியான முடிவை மேற்கொள்வதற்காக உள்ளுணர்வை ஏற்படுத்தி இறைவன் அதிலிருந்து தப்பிக்கச் செய்து விடுவான்.  16:128. தன்னை அஞ்சி நல்லறங்கள் செய்வோருடனே அல்லாஹ் இருக்கிறான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.



யூசுஃப்(அலை) அவர்களை அப்பெண் தவறான வழிக்கு அழைத்ததும் இன்று நாம் தொலைந்தோம் இவளுடையப் பிடியிலிருந்து தப்பிப்பது சிரமம் என்று நினைத்து அவநம்பிக்கை அடையாமல்  ''அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோரினார்கள்.



யூசுஃப்(அலை) அவர்கள் பாதுகாப்புக் கோரியப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது அத்தாட்சியை யூஸூஃப் (அலை) அவர்களுக்கு காண்பிக்கச் செய்து அதிவேகத்தில் அங்கிருந்து அவரை இறைவன் ஓடச்செய்து விடுகின்றான், அவர் ஓடத் தொடங்கியதும் அப்பெண்ணும் அவரைப் பின் தொடர்ந்து ஓடி அவருடைய சட்டையைப் பிடித்து இழுக்க சட்டைக் கிழிந்து விடுகிறது. இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள்... 12:25



அப்பெண்ணிடமிருந்து தப்பித்து ஓடியவர் வெளியில் ஓடுவதற்காக வாசலை நெருங்கிய பொழுது அவருடைய எஜமானன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து விடுகிறார். 12:25 அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர்...



தனது கணவனை வாசலருகில் கண்டதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிடியுங்கள் அவரை நீங்கள் இல்லாத போது என்னை மானபங்கப் படுத்த முயற்சித்ததற்காக சிறையில் அடைத்து சித்ரவதை செய்ய உத்தரவிடுங்கள் என்று கர்ஜிக்கின்றார். 12:25 ''உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?'' என்று அவள் கூறினாள்.



அப்பெண்ணை விட்டு அவர் ஓடுவதில் சிறிதேனும் காலதாமதமாகி இருந்தால் எஜமானனுடைய பார்வையில் யூசுஃப்(அலை) அவர்களே குற்றவாளியாக தெரிந்திருப்பார்கள் ஏன் என்றால் ? இவர் தான் என்னைக் கட்டாயப்படுத்தினார் என்று அப்பெண் கூறினால் அதுவே எடுபடுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. 


யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை அவரது எஜமானன் உறுதிபடுத்திக் கொள்வதற்காக இறைவன் அவரது சட்டையின் பின்புறத்தை அப்பெண்ணின் கைகளில் சிக்கி கிழியச்செய்து விடுகிறான். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, ''இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார். 12:28



நடந்து முடிந்த வெறுக்கத்தக்க நிகழ்வுக்கு யார் காரணம் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட அவரது எஜமானர் அவரை நிரபராதி என்றுக்கூறி விட்டு தமது மனைவியின் சூழ்ச்சியை எடுத்துக்கூறி  இறைவனை பயந்துகொள்ளும் படி உபதேசிக்கின்றார்.  '' யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!'' (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்). 12:29



துன்பமே நிகழப்போகின்றது என்று உறுதியாகத் தெரிந்தாலும் இறைவன் எம்மைக் காப்பாற்றுவான் இறைவன் எமக்குப்போதுமானவன் என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோரிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவன் பொறுப்பேற்றுக்கொள்வான் என்பதற்கு மேற்காணும் இறைநம்பிக்கையாளராகிய யூஸூஃப்(அலை) அவர்களை இறைவன் தனது அருளால் அவர் மீதுப் பாவக்கரைப் படிவதற்கு முன் மீட்டெடுத்தச் சம்பவம்  இறையருளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார். 12: 24.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011



قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِندِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِ مِنَ القُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَن ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ

28: 78. ''என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். ''இவனை விட அதிக வரிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். 


அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறந்த அந்த மூவரும்


அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில் ஒரு வெண்தோல் உடையவர், ஒரு வழுக்கைத்தலையுடையவர், ஒரு குருடர் ஆகிய மூவர் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடி அவர்களிடம் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் (முதலில்) வெண்தோல் நோயுடையவரிடம் வந்து , உமக்கு மிக உவப்பானது எது என வினவினார் ? அதற்கவர் அழகிய நிறம், அழகிய தோல் (மக்கள் அறுவெறுக்கும் வெண் தோல்) என்னை விட்டுப் போய் விட வேண்டும் எனக் கோறினார்.

அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே அவரது அறுவெறுப்பான நிறம் போய் விட்டது அழகிய நிறம் கொடுக்கப்பட்டார். பின்னர் உமக்கு எச்செல்வம் உவப்பானது ? என அம்மலக்கு அவரிடம் வினவினார். அவர் ஒட்டகை வேண்டும் எனக்கூறவே , அவருக்கு ஒரு சினை ஒட்டகை வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி அருள்வானாக ! என ( அவருக்கு ) அம்மலக்கு ( வாழத்துக் ) கூறினார்.

பின்னர் அவ்வழுக்கைத் தலையுடையவரிடம் அம்மலக்கு வந்து உமக்கு மிக உவப்பானது எது என்று வினவினார்?

அதற்கவர் மக்கள் என்னை வெறுக்கும் இவ்வழுக்கை என்னை விட்டுப் போய்விட வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே, அவரது வழுக்கை அவரை விட்டுப் போய் விட்டது. அழகிய தலைமுடி அவருக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர் அம்மலக்கு அவரிடம் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது ? என வினவினார். அவர் பசுமாடு எனக்கூறவே அவருக்கு ஒரு சினைப் பசுமாடு வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு பரகத்(அபிவிருத்தி)வழங்குவானாக! என அவருக்கு அம்மலக்கு வாழத்துக் கூறினார்.

பின்னர் குருடரிடம் அம்மலக்கு உமக்கு மிக உவப்பானது எது ? என வினவினார் அல்லாஹ் எனக்கு கண்ணொளி வழங்கி அதன் மூலம் நான் மக்களைப் பார்க்க வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே அல்லாஹ் அவருக்கு கண்ணொளி வழங்கினான். பின்னர் அம்மலக்கு அவரிடம் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது? என வினவினார். அதற்கவர் ஆடு எனக்கூறவே அவருக்கு ஒரு சினை ஆடு வழங்கப் பட்டது. அல்லாஹ் உமக்கு பரகத் (அபிவிருத்தி ) அருள்வானாக ! என அம்மலக்கு வாழ்த்துக் கூறினார்

மூவருக்கும் அருளிய அவர்களுடைய கால் நடைகள் குட்டி போட்டன. முதலாமவருக்கு ஒட்டக மந்தையும், இரண்டாமவருக்கு மாட்டுப்பண்ணையும், மூன்றாமவருக்கு ஆட்டுமந்தையும் உருவானது.

பிரிதொரு காலத்தில் ஒரு நாள் . . .
பின்னர் அம்மலக்கு வெண்தோல் நோயுடையவராக இருந்தவரிடம் வெண்தோல் நோயுடையவர் தோற்றத்தில் வந்து, நான் ஓர் ஏழை மனிதன் எனது பிரயாணத்தில் எனது பொருட்கள் தீர்ந்து விட்டன. இப்பொழுது எனக்கு இங்கே அல்லாஹ்வையும் உம்மையுமல்லாது எனக்கு வேரு வழியில்லை. ஆகவே உமக்கு அழகிய நிறத்தையும், அழகியதோலையும், பொருட்செல்வங்களையும் வழங்கிய அல்லாஹ்வைக் கொண்டு, உம்மிடம் ஓர் ஒட்டகையை கேட்கிறேன். அதனைக் கொண்டு எமது பயணத்தில் போதுமாக்கி கொள்கிறேன் என்றார்.

அதற்கவர் எனக்கு ஏராளமான கடமைகள் உள்ளது.(அவைகளை நிறைவேற்ற வேண்டி உள்ளதால் உமக்கு ஒட்டகை தரமுடியாது என்றார். அதற்கு அம்மலக்கு நான் உம்மை அறிவேன் நீர் (ஒரு காலத்தில்) மக்கள் வெறுக்கும் வெண்தோல் நோயுடையவராகவும், ஏழையாகவும் இருக்க வில்லையா ? அல்லாஹ் உமக்கு இவைகளை வழங்கினான்.

அதற்கவர் இச்செல்வங்களை என் மூதாதையரிடமிருந்து பரம்பரை வாரிசு சொத்தாகப் பெற்றேன் எனக்கூறினார்.

அதற்கு அம்மலக்கு இக்கூற்றில் நீ பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் நீர் எவ்வாறு இருந்தீரோ அவ்வாறே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக ! எனக் கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு வழுக்கைத் தலையுடையவரிடம் , வழுக்கைத் தலை தோற்றத்தில் வந்து அவரிடம் ( முன்னவரிடம் ) கேட்டது போல கேட்டார்.

அவரும் அவர் பதிலளித்தது போன்றே பதிலளிக்கவே , நீர் உமது கூற்றில் பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் நீர் எவ்வாறு இருந்தீரோ அது போன்றே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக ! என அம்மலக்கு கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு குருடரிடம் , குருடர் தோற்றத்தில் வந்து, நான் ஏழை வழிப் போக்கன் பிரயாணத்தில் என் பொருட்கள் தீர்ந்து விட்டன. இன்று எனக்கு அல்லாஹ்வைக்கொண்டும் பின்னர் உம்மைக் கொண்டுமே தவிர வேரு வழியில்லை. அல்லாஹ்வைக்கொண்டு உம்மிடம் ஓர் ஆட்டைக் கேட்கின்றேன். அதைக்கொண்டு எமது பயணத்தை போதுமாக்கி கொள்வேன் என்று கூறவே.

அதற்கவர் நான் குருடனாக இருந்தேன் அல்லாஹ் எனக்கு பார்வையை மீட்டித்தந்தான். (எனது செல்வத்தில்) நீர் விரும்புபவைகளை எடுத்துக் கொண்டு மீதியை விட்டுச்செல்லும் ! நீ எடுத்துக் கொள்ளும் பொருளை அல்லாஹ்வுக்காக இன்று உமக்கு அளிக்கத் தயங்க மாட்டேன். எனக்கூறினார்.

அதற்கு அம்மலக்கு உம் செல்வங்களை உம்மிடமே வைத்துக் கொள்வீராக ! நீங்கள் மூவரும் சோதிக்கப்பட்டீர்கள் ( அதில் ) அல்லாஹ் உம்மை பொருந்தி கொண்டான் உம் மற்ற இரு தோழர்கள் மீதும் அல்லாஹ் கோபமடைந்து விட்;டான் எனக்கூறினார் - நூல் : புகாரி , முஸ்லிம்


மேற்கானும் நபிமொழி நமக்கு உணர்த்துவதென்ன ? மேற்கானும் நபிமொழி நமக்கு உணர்த்துவது யாதெனில். நாம் தமக்குத் தேவையானவைகளை மிக பவ்வியமாக அல்லாஹ்விடம் கேட்டுப்பெறுகிறோம். அல்லாஹ்வும் நமது தேவைகளை அறிந்து அதற்கொப்ப அல்லது அதைவிட அதிகமாகத் தந்து மகிழ்கிறான். தேவைக்கதிகமாகக் கிடைத்து விட்டால் அவைகளை தாம் கடினமான முயற்சிகளை மேற்கொண்டு சம்பாதித்தவைகள் என மனிதன் இருமாப்புக்கொள்ள ஆரம்பித்து விடுகிறான். தான் சம்பாதித்தவைகள் என்கிற சிந்தனைகள் உருவாகும்போது அச்செல்வங்களை தனது கையில் இருகப்பிடித்து வைத்துக்கொள்கிறான். தன்னைப்போன்ற பிற சகோதரனுடைய தேவையைப் பூர்த்தி செய்யத்தயங்கி விடுகிறான். தாம் ஒருகாலத்தில் தனது தேவைக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுது மன்றாடியதை மறந்து விடுகிறான் அல்லாஹ்விடம் நன்றி கெட்டவனாகி விடுகிறான், தான் என்ற மமதைக்கு நிரந்தர சொந்தக்காரனாகி விடுகிறான். தான் என்கிற மமதை உருவானால் ?

அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; ''நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்'' என்று கூறினார்கள். 28:76

(அதற்கு அவன்) கூறினான்; ''எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!'' . . . 28:78


காருன் தனக்குக் கிடைத்த செல்வங்களை தன்னுடைய அறிவுத்திறமையால் அடைந்து கொண்டதாக தன்னுடைய கூட்டத்தாரிடம் கூறினான். அதனால் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான் கலை நுனுக்கத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு தகுந்தாற் போல் எழுப்பிய தனது பங்களாவுக்குள் நுழைய முடியாமல் அதன் நுழைவு வாயிலில் வைத்து அவனையும், அவனது சொகுசு பங்களாவையும் பூமிக்குள் புதையச் செய்து விடுகின்றான்.  

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச்செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. 28:81


நம்மிடம் குவியும் செல்வங்கள் நாம் நம்முடைய அறிவுத் திறமையைக்கொண்டு உருவாக்கியவைகள் எனும் என்னம் எக்காரணம் கொண்டும் நம் மனதில் கடுகளவும் உதிக்கக் கூடாது என்பதற்காக மேற்கானும் காரூனுடைய சம்பவத்தை அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.( நாம் கஸ்ட்டப்பட்டே செல்வங்களை உருவாக்கினாலும் தன்னுடைய உடல் உழைப்பால், அறிவுத் திறமையால் உருவாக்கியது என்று என்னக்கூடாது, பிறரிடமும் அவ்வாறு கூறவும் கூடாது, நாம் உலகில் பலரைக் காண்கின்றோம் அவர்களில் எத்தனையோப் பேர் தங்களது அறிவுத் திமையைக் கொண்டும், உடல் உழைப்பைக் கொண்டும் விடா முயற்சியாக பாடுபடுவர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் உழைப்பின் அளவுக்கு செல்வங்களை ஈன்றிடுவதில்லை, இதனால் விரக்தி அடைந்து போனவர்கள் ஏராளமானோரைக் கானலாம் அறிவுத் திறமையால் செல்வங்களை அடைய முடியுமென்றிருந்தால் இன்று உலகில் செல்வந்தர்களே 90 சதவிகிதத்தினராக இருப்பர். இன்று நிலைமை அவ்வாறில்லை 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் ஏழைகளாகவே உள்ளனர் அவர்களில் அதிகமானோர் அறிவாளிகளாகவும் இருப்பர்.

தனது தேவைக்கு அதிகமான செல்வங்களை ஈன்றவர்கள் அவைகளை அல்லாஹ் வழங்கினான், தனது அறிவுத் திறமையால் அடையவில்லை என்று சிந்திக்க வேண்டும், அப்படி சிந்தித்தால் தர்ம சிந்தனை மனதில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். தான் உருவாக்கியவைகள் என்கிற மமதை மனிதனுக்கு ஏற்ப்படுமாயின் அச்செல்வங்கள் குறிப்பிட்ட ஒரு வரையரைக்குள் முடங்கி விடும். இஸ்லாம் கூறும் தர்மமும், சகோதரத்துவமும் முடங்கிப்போய்விடும் இன்று இப்படித்தான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏழை முஸ்லீம்களும் கையேந்துபவர்களாகி விட்டனர். இங்கே இன்னொரு ஹதீஸைக் குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

மனிதன் என்னுடையது , என்னுடையது என்கிறான். மனிதனே ! நீ உண்டு கழித்தவற்றையும் , உடுத்திக் கிழித்தவற்றையும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தவற்றையும் தவிர உன்னுடையது என்று ஏதும் உண்டா ? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்கிர் (ரழி) நூல் : முஸ்லிம்

மனிதன் இவ்வுலகிற்கு வரும் போது எதைக் கொண்டு வந்தான் என்பதை மிக முக்கியாக கவனிக்க வேண்டும், அதே போல் திரும்பிச் செல்லும் போதும் எதை எடுத்துச் செல்கின்றான் ? என்பதையும் கவனிக்க வேண்டும் வரும் பேர்தும் போகும் போதும் விரித்த வெரும் கை தான். இடைப்பட்ட நாட்களில் உண்டு கழித்தவற்றையும், உடுத்திக் கிழித்தவற்றையும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தவற்றையும் தவிர உன்னுடையது என்று ஏதும் உண்டா ? என்று கூறும் நபிமொழியை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். வரும் போதும் கொண்டு வராத, திரும்பி போகும் போதும் எடுத்துச் செல்ல முடியாத இடையில் இறைவனால் கொடுக்கப் பட்ட நம்மைச் சாராத ஒன்றை நம்முடைய அறிவைக் கொண்டு திறமையைக் கொண்டு அடைந்ததாக மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமுண்டோ ? அவ்வாறு இறைவனுடைய மாபெரும் கிருபையால் நமக்கு கிடைக்கப் பெற்றதை நமது சகோதரனுக்கு பங்கிட்டு வழங்கி அவனுடைய சந்தோஷத்தை அடைந்து கொள்ளாதது ஏன் சிந்தித்தால் தெளிவு பெறலாம்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட் கொடைகளில் தான் உண்டு புசித்தது போக மீதியில் சிலதை தனது வாரிசுகளுக்கு ஒதுக்கி விட்டு மீதியை தர்மம் செய்து விடுவது முஸ்லீமுக்கு சிறந்த பண்பாகும். காரூனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையை நமக்கு உதாரணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் சுப்ஹான ஹூவத்தாலா குர்ஆன் நெடுகிலும் நபிமார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைளையும் பல ஊரார்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் சுட்டிக் காட்டுவதன் நோக்கம் மனிதர்கள் அவைகளை தங்களது இன்றைய வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்வதற்காகவேயன்றி வேறில்லை.

ஆனால் இன்றைய சமுதாயத்தவர்களோ குர்ஆனில் கூறப்படும் சரித்திரச் சான்றுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பொழுது போக்குப் போன்று படித்து விட்டு அதை விட்டு விடுகின்றனர் பெரும்பாலானோர் அவைகளை படிப்பதுமில்லை,

தனக்குகிடைக்கப் பெற்றது இறைவனுடைய அருட்கொடை என்பதை மறந்து விட்டு தன் முயற்சியால், தனது திறமையில் ஈன்றது என்றும், தனது முன்னோர்களுடையது என்றும் கொடுக்க மனமில்லாமல் பொய் சொன்னால் கொடுத்தவற்ற அல்லாஹ் மீண்டும் பறித்துக்கொண்டு பழைய நிலைக்கே திருவோடு தூக்க விட்டு விடுவான் என்பதையே மேற்காணும் அல்லாஹ்வை மறநத பனூஇஸ்ரவேலர்களுடைய சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறான்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்